'நான் டெல்லியில் இருந்தால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன்' - குலாம் நபி ஆசாத்
|புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி(நாளை) திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மூத்த தலைவரும் ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் தலைவருமான, குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது என கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் டெல்லியில் இருந்தால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன். புதிய நாடாளுமன்றம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
30-35 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாடாளுமன்ற விவகார மந்திரியாக இருந்தபோது புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து திட்டமிட்டோம். அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், சிவராஜ் பாட்டீலும், நானும் இத்திட்டம் பற்றி விவாதித்து ஒரு வரைபடத்தை கூட உருவாக்கினோம். ஆனால் அப்போது எங்களால் அதைச் செய்ய முடியவில்லை, இந்நிலையில் தற்போது இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விஷயம்" என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.