< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் வருவேன்; ஆனால்... கெஜ்ரிவால் பேட்டி
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் வருவேன்; ஆனால்... கெஜ்ரிவால் பேட்டி

தினத்தந்தி
|
17 Jan 2024 7:57 PM IST

அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் அயோத்திக்கு அதிக ரெயில்களை இயக்குவதற்கான முயற்சிகளை டெல்லி அரசு மேற்கொள்ளும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது. அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறும்போது, சிலை பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் அயோத்திக்கு அதிக ரெயில்களை இயக்குவதற்கான முயற்சிகளை டெல்லி அரசு மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, அவர்களிடம் இருந்து இறுதியாக அழைப்பிதழ் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என அவர்கள் கூறினார்கள். ஆனால், விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு முன் கிடைத்த கடிதத்தில், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வி.ஐ.பி.க்களின் வருகை ஆகியவற்றை முன்னிட்டு ஒரே ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அயோத்திக்கு என்னுடைய குடும்பத்துடன் வருவதற்கு நான் விரும்புகிறேன். ராமர் கோவிலுக்கு வருவதற்கு என்னுடைய பெற்றோர் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதனால், ஜனவரி 22-ந்தேதிக்கு பின்னர் வேறொரு நாளில் நாங்கள் கோவிலுக்கு செல்வோம் என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வரவில்லை என கூறினார். அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக தேதிகளை ஒதுக்க வேண்டும் என தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு, கடிதம் ஒன்று வந்தது. ஆனால், அதற்கு பின்னர் முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என ஆம் ஆத்மியின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.

மேலும் செய்திகள்