'தேர்தலுக்குப் பிறகு விசாகப்பட்டினத்தில் முதல்-மந்திரியாக பதவியேற்பேன்' - ஜெகன் மோகன் ரெட்டி
|மாநிலத்தின் நிர்வாக தலைநகராக இருப்பதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் விசாகப்பட்டினத்தில் உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
அமராவதி,
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு அறிவித்திருந்தது. அதன்படி விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராக மாற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது;-
"விசாகப்பட்டினத்தை ஆந்திர மாநிலத்தின் 'நிர்வாக' தலைநகராக மாற்றுவதற்கு பாடுபடும் ஒரே நபர் நான்தான். அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக நான் போராடி வருகிறேன்.
எதிர்க்கட்சிகளும், அவர்களின் நட்பு ஊடகங்களும் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக மாற்றும் யோசனையை எதிர்க்கின்றன. அவர்களது விருப்பம் வேறு இடத்தில் இருக்கிறது என்பதற்காக அவ்வாறு செய்கிறார்கள்.
அமராவதியை தலைநகராக உருவாக்குவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் 50,000 ஏக்கர் நிலத்தில் தலைநகருக்குத் தேவையான உள்கட்டமைப்பை புதிதாக உருவாக்க ஒவ்வொரு ஆண்டும் 5,000 கோடி ரூபாய் என, 20 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த மதிப்பீடுகள் உயரவும் கூடும். இந்த உண்மைகளை எதிர்கட்சி ஊடகங்கள் மறைக்கின்றன.
எவ்வாறாயினும், விசாகப்பட்டினம் மாநிலத்தின் நிர்வாக தலைநகராக இருப்பதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. அதில் சில சீரமைப்புகளை மட்டுமே செய்ய வேண்டும். தேர்தலுக்குப் பிறகு விசாகப்பட்டினத்தில் ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவியேற்பேன்."
இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.