'நீங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு நிகராக பள்ளிகளைத் திறப்பேன்' - அரவிந்த் கெஜ்ரிவால்
|டெல்லி மயூர் விஹார் பகுதியில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவின்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது;-
"நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசுப் பள்ளிகளின் நிலை மற்றும் கல்வி தரம் முன்பு மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகு பல பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளோம். புராரி, ரோகிணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்வி பெறுவார்கள்.
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். டெல்லியில் அனைவருக்கும் இலவச மற்றும் தரமான கல்வி கிடைக்கும். அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும். அந்த இலக்கை அடைவதற்காகவே நாங்கள் டெல்லியில் அடுத்தடுத்து பள்ளிகளைத் திறந்து வருகிறோம்.
ஆம் ஆத்மி அரசின் பணிகளில் மத்திய அரசு பல தடைகளை உருவாக்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் துணை நிலை கவர்னர் மூலம் அந்த திட்டத்தை மத்திய அரசு தடை செய்தது. தற்போது பஞ்சாப்பில் அந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. தொடர்ந்து டெல்லியிலும் அதை நாங்கள் செயல்படுத்துவோம்.
நீங்கள் எனக்கு எத்தனை சம்மன்கள் அனுப்பினாலும், அதற்கு நிகராக நான் பள்ளிக்கூடங்களைத் திறப்பேன். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், நான் என்னுடைய வேலையை செய்கிறேன்."
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார். முன்னதாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாததால், அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட்டு, வரும் 17-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.