'நரேஷ் - பவித்ரா லோகேசின் திருமணத்தை நடத்த விடமாட்டேன்'
|நரேஷ் - பவித்ரா லோகேசின் திருமணத்தை நடத்த விடமாட்டேன் என்று நரேசின் 3-வது மனைவி ஆவேசமாக கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கன்னட நடிகை
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தனது 16-வது வயதில் திரைஉலகிற்கு வந்த பவித்ரா லோகேஷ் இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் மைசூரு மாவட்டம் ஆகும். இவர் முதலில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து அவர் கன்னட நடிகர் சுசேந்திர பிரசாத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் - மனைவிபோல் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்த பவித்ரா லோகேசுக்கு, பிரபல நடிகர் நரேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் - மனைவிபோல் வசித்து வருகிறார்கள்.
3 முறை திருமணம் ஆனவர்
நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவர் ஆவார். அவர் முதன்முதலில் தனது நடன இயக்குனரின் மூத்த மகளை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்த நரேஷ் பாபு, 2-வதாக பிரபல பாடல் ஆசிரியர் தேவுப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விட்டு பிரிந்த நரேஷ் பாபு 3-வதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரம்யா ரகுபதி, நரேஷ் பாபுவைவிட 20 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் நரேசும், பவித்ரா லோகேசும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர்.
விடுக்கொடுக்க...
இதுபற்றி அறிந்த நரேசின் 3-வது மனைவி ரம்யா ஆவேசம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் நான் இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன். நான் இதுவரை உண்மையாக விவாகரத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த வேளையில் இதுபோன்ற செயலை இருவரும் கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நரேசை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை' என்று கூறியுள்ளார்.
இதனால் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைஉலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.