"செருப்பால் அடிப்பேன்" ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே - எச்சரிக்கை விடுத்த நடிகர் பவன் கல்யாண்
|ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே எனது பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என நடிகர் பவன் கல்யாண் கூறினார்.
திருமலை:
ஆந்திராவுக்கு 3 தலைநகரம் அமைக்க வலியுறுத்தி, 'வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு'வினர், சில நாட்களுக்கு முன்பு, 'விசாக கர்ஜனை என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.
இதில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் மந்திரி ரோஜா உள்ளிட்டோரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ரோஜாவின் உதவியாளர், மேலும் போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாஜவின் 'பி டீம்'மாக செயல்படும் நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை பா.ஜ.கவிடம் பணம் வாங்கி நடத்தி வருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதி அருகே தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியினர் இடையே பேசிய பவன் கல்யாண், திடீரென காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி உயர்த்தி காட்டி, 'மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என என்னை சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே எனது பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்,' என ஆவேசமாக பேசினார்.