< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன்:  லலித் மோடி மிரட்டல்
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன்: லலித் மோடி மிரட்டல்

தினத்தந்தி
|
30 March 2023 1:34 PM IST

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என ஐ.பி.எல்.லின் முன்னாள் தலைவரான லலித் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.

ராகுல் காந்தி கர்நாடகத்தில் கோலார் நகரில் ந்டந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பொதுவான பெயரை கடைசியாக கொண்டு உள்ளனர்? என பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதில், லலித் மோடி மற்றும் வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோரது பெயருடன் பிரதமர் மோடியின் பெயரையும் இணைத்து பேசினார். இதன் தொடர்ச்சியாக கோர்ட்டு தீர்ப்பு, எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்தன. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என ஐ.பி.எல்.லின் முன்னாள் தலைவரான லலித் மோடி கூறியுள்ளார். எந்த அடிப்படையில், நீதியில் இருந்து தப்பியோடிய நபர் என தன்னை ராகுல் காந்தி அழைக்கிறார்? என கேள்வி எழுப்பிய லலித் மோடி, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு, காந்தி குடும்பம் செய்தவற்றை விட தனது குடும்பம் அதிகம் செய்து உள்ளது என லலித் மோடி கூறியுள்ளார். ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் கோடி அளவிலான சொத்துகளை கொண்ட உலகின் மிக பெரிய விளையாட்டை உருவாக்கினேன் என அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என கூறி சவால் விடுத்துள்ள லலித் மோடி, அவரை கோர்ட்டில் முழு முட்டாளாக்க காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று, பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாடுகளில் சொத்துகள் வைத்து உள்ளனர் என குற்றச்சாட்டு கூறிய லலித் மோடி, அவர்களது சொத்துகளுக்கான முகவரிகள் மற்றும் புகைப்படங்களையும் தன்னால் வழங்க முடியும் என தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் விரைவில் இந்தியாவுக்கு திரும்புவேன் என்றும் லலித் மோடி கூறியுள்ளார். எனினும் லலித் மோடியின் டுவிட்டர் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை பற்றிய அச்சுறுத்தலுக்கு ராகுல் காந்தி எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்