< Back
தேசிய செய்திகள்
ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்- சித்தராமையா பேட்டி
தேசிய செய்திகள்

ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்- சித்தராமையா பேட்டி

தினத்தந்தி
|
17 Aug 2024 4:07 PM IST

முதல்-மந்திரி சித்தராமையா மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது

இந்நிலையில், கர்நாடகா துணை முதல்-மந்திரி டி. கே. சிவக்குமார், மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார். சித்தராமையா வீட்டில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது,

ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் கவர்னர் அளித்துள்ள சட்டவிரோத ஒப்புதல் என்பதால் கோர்ட்டில் சட்ட ரீதியாக போராடுவேன். எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் மீது நாங்கள் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிய அனுமதி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி. கே. சிவக்குமார் கூறுகையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே கவர்னர் அனுப்பிய சம்மனுக்கு முதல்-மந்திரி தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க அனுமதி வழங்கியது உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரபராதி என அவர் நீரூபிப்பார். அவர் மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது" என்றார்.

மேலும் செய்திகள்