பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன்; பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது எனக்கு நன்றாக தெரியும் - ராகுல் காந்தி
|பயங்கரவாதத்தால் எனது பாட்டி, தந்தையை இழந்தேன் என்றும், பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பிரதமர் மோடியை விட எனக்கு நன்றாக தெரியும் என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆதரவு வழங்குனீர்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பெலகாவியில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் மூலம் புதிய அரசு அமைய உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு ஆட்சியை (காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு) அமைக்க ஆதரவு வழங்கினீர்கள். ஆனால் அந்த ஆட்சியை பா.ஜனதா திருடிவிட்டது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது.
பிரதமர் மோடிக்கு கடிதம்
மக்களின் பணத்தை திருடவே பா.ஜனதா திருட்டு அரசை அமைத்தது. கடந்த 3 ஆண்டுகளில் கொள்ளையடிப்பதில் பா.ஜனதா அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பா.ஜனதா அரசு தான் நாட்டிலேயே அதிக ஊழல் செய்த அரசு ஆகும். ஒப்பந்ததாரர்கள் சங்கம் 40 சதவீத கமிஷன் வசூல் செய்வதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதன் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜனதாவில் முதல்-மந்திரி பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்வதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. கூறினார். மடங்களுக்கு வழங்கிய நிதியிலும் 30 சதவீத கமிஷன் வசூல் செய்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் நியமனம், உதவி என்ஜினீயர் நியமனம், கல்லூரி உதவி ஆசிரியர் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. பா.ஜனதா அரசு எல்லாவற்றிலும் ஊழல் செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை.
விலைவாசி உயர்வு
கர்நாடக பா.ஜனதா அரசின் ஊழல்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தாரா?. எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்?. எத்தனை பேரை அவர் சிறையில் தள்ளியுள்ளார்?. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. சமையல் கியாஸ் விலை ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது. பெட்ரோல் விலை ரூ.60-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
வேலையின்மை பிரச்சினைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கர்நாடக இளைஞர்களுக்கு மோடி பதிலளிக்க வேண்டும். கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மோடி என்ன செய்தார்?. கர்நாடக நதிநீர் பிரச்சினையை தீர்க்க மோடி நடவடிக்கை எடுத்தாரா?.
5 வாக்குறுதிகள்
ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினை பற்றி மோடி பேசுவதே இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தால், நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். சித்தராமையா ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், நலிந்த பிரிவினருக்கு உதவிகள் செய்யப்பட்டன. இந்த முறை நாங்கள் புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்த போகிறோம்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே 5 முக்கியமான வாக்குறுதிகளை செயல்படுத்த உறுதியளித்துள்ளோம். பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு என்ன செய்தது என்பது குறித்து பேச வேண்டும். பயங்கரவாதத்தை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார்.
நன்றாக தெரியும்
பயங்கரவாதிகள் எனது குடும்பத்தினரை கொன்றனர். பயங்கரவாதத்தால் எனது பாட்டி, எனது தந்தையை இழந்தேன். அதனால் பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது, அது என்ன செய்யும் என்பது மோடியை விட எனக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தனிப்பெரும்பான்மை பலத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 40 சதவீத கமிஷன் பா.ஜனதாவுக்கு 40 இடங்கள் மட்டுமே மக்கள் வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை 150 தொகுதிகளில் வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா காங்கிரஸ் ஆட்சியை திருடிவிடும். அவ்வாறு திருடினால் உங்களின் பணத்தை திருடுவார்கள். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது எனக்கு நன்றாக தெரிகிறது. காங்கிரஸ் அரசு விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு ஆதரவான அரசாக இருக்கும். இது தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான ஊழல் அரசாக இருக்காது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
பிரதமருக்கு பதிலடி
பிரதமர் மோடி நேற்று முன்தினம் பல்லாரியில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறது என்றும், நாட்டை அழிக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நேற்று ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.