வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை பிளவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை; சித்தராமையா பேட்டி
|வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை பிளவு படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மடாதிபதியுடன் பேச்சு
கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனி மத அநதஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் ரம்பாபுரி மடத்தின் மடாதிபதியிடம் சித்தராமையா மீண்டும் பேசியதாக தகவல்கள் வெளியானது.
அதாவது வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
விளக்கம் மட்டுமே அளித்தேன்
வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க வேண்டும், பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எந்த ஒரு சமுதாயத்தையும் பிளவுபடுத்த வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. சாமனூர் சிவசங்கரப்பா உள்ளிட்டோர் எனக்கு சில கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். அதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்தேன். மந்திரிசபையும் ஒப்புதல் வழங்கியதால், வீரசைவ-லிங்காயத் தனி மத அந்தஸ்து வழங்கும் முடிவுக்கு வரப்பட்டது. இதுபற்றி ரம்பாபுரி மடாதிபதியிடம்
விளக்கம் மட்டுமே அளித்தேன். வேறு எது பற்றியும் நான் பேசவில்லை. ஒவ்வொரு சமுதாயத்தின் வளர்ச்சியும், அந்த சமுதாய மக்களின் வளர்ச்சியும் எனக்கு முக்கியம். ஏழைகளுக்கு நல்லது நடக்க வேண்டும். அவர்கள் இந்த சமுதாயத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.