நானும் பணம் போட வந்திருக்கிறேன்...!! வங்கிக்குள் நுழைந்த காளை; வைரலாகும் வீடியோ
|அவர்களால் காளையை கூட மதிய உணவு இடைவேளையில் கையாள முடியவில்லை. கொள்கையில் தங்களை அர்ப்பணித்து கொண்டனர் என ஒருவர் கிண்டலாக தெரிவித்து இருக்கிறார்.
உன்னாவ்,
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மதியம் உணவு வேளையின்போது, திடீரென காளை ஒன்று உள்ளே புகுந்துள்ளது. சற்று நேரம் வாசலின் உட்புறம் நின்றபடி வங்கியில் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தது. அந்த காளை, நானும் பணம் போட வந்திருக்கிறேன் என்று கூறுவது போன்று நின்றது.
இதனால் வங்கியில் பணம் செலுத்த மற்றும் பிற சேவைகளுக்காக வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
அந்த காளை, சிறிது நேரத்திற்கு பின்னர் நேராக உள்ளே சென்றது. இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை மணீஷ் என்பவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில், வாடிக்கையாளர்களை பின்னால் செல்லும்படி ஒருவர் கூறும் சத்தம் கேட்கிறது. வீடியோவின் இறுதியில், வங்கி பாதுகாவலர் குச்சி ஒன்றை எடுத்து வந்து அதனை விரட்டுகிறார்.
வங்கியில் கடன் கேட்பதற்காகவோ அல்லது ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதற்காகவோ எந்த காரணத்திற்காக அந்த காளை வந்ததோ என தெரியவில்லை. இதுபற்றி ஒருவர், மதிய உணவு இடைவேளையில் காளையை கூட அவர்களால் கையாள முடியவில்லை. அவர்கள் தங்களுடைய கொள்கையில் தங்களை அர்ப்பணித்து கொண்டனர் என கிண்டலாக விமர்சனம் தெரிவித்து இருக்கிறார். எனினும், யாருக்கும் எந்தவித சிறப்பு சலுகைகளும் கிடையாது என மணீஷ் அதற்கு பதிலாக தெரிவித்து இருக்கிறார்.