இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை - ராகுல் காந்தி
|எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்துள்ளதால் பாஜக-விற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டது.
ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களின் நாடுகளை குறிக்கும் வகையில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டிருந்த பலகையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக "பாரத்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் கூறும்போது, "இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை. இந்தியா, பாரத் என்ற இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது.
இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்துள்ளதால் பாஜக-விற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.