< Back
தேசிய செய்திகள்
கார்கேவுக்கு கட்சியில் கிடைக்கிற வரவேற்பு எனக்கு இல்லை; சசிதரூர் ஆதங்கம்
தேசிய செய்திகள்

கார்கேவுக்கு கட்சியில் கிடைக்கிற வரவேற்பு எனக்கு இல்லை; சசிதரூர் ஆதங்கம்

தினத்தந்தி
|
13 Oct 2022 2:44 PM IST

காங்கிரஸ் கட்சியில் கார்கேவுக்கு கிடைக்கிற வரவேற்பு எனக்கு இல்லை என சசிதரூர் பேட்டியில் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.



புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந்தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதற்கு முன், காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான திக் விஜய்சிங் (வயது 75) தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

அதன்பின்பு, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவாக திக்விஜய சிங் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

வேட்புமனுவை விதிமுறைகளின்படி பூர்த்தி செய்யாததால் கே.என். திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்தார். இதன்மூலம், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், சற்றும் எதிர்பாராமல் கடைசி நேரத்தில், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே களத்தில் குதித்தார்.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடைசி நேரத்தில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்பாக நான் போட்டியிடுமாறு கூறப்பட்டேன். என்னை எதற்காக தலைவர் தேர்தலில் நிற்கச்சொல்கிறீர்கள் என நான் கேட்டேன்.

அதற்கு, தனது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடுவதற்கு, ராகுல் காந்தி விரும்பவில்லை என்று எனக்கு கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியும், அவரது தலைமையும் தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன். அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால் நான் அவரது உணர்வுகளின் உன்னதத்தை மதிக்கிறேன் என கூறினார்.

எனினும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதனை கார்கே தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் போட்டியில் உள்ள சசி தரூர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அவர் பேசும்போது, கட்சி தலைவர் தேர்தலுக்கான போட்டியில் காணப்படுகிற சமச்சீரற்ற நிலைமையை குறிப்பிட்டு பேசினார்.

அவர், பல்வேறு காங்கிரஸ் பிரதேச கமிட்டிகளில், கார்கேவை தலைவர்கள் பலர் வரவேற்றனர். அவரை சந்தித்து பேசினர். ஆனால், எனக்கு அப்படி செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.

நான் காங்கிரஸ் பிரதேச கமிட்டிக்கு பல முறை சென்றுள்ளேன். ஆனால், அவற்றின் தலைவர்கள் பலநேரம் சந்திக்கும் வகையில் அலுவலகத்தில் இருப்பதில்லை. இதனால், அவர்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நான் இதனை புகாராக உங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், இருவரையும் நடத்துவதில் உள்ள வேற்றுமையை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், கட்சி தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே காங்கிரசில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது அரசியல் நோக்கர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.



மேலும் செய்திகள்