அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் நான் தலையிடவில்லை; யதீந்திரா சித்தராமையா பேட்டி
|அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் நான் தலையிடவில்லை என்று யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா பெயரில் அதாவது சுருக்கமாக ஒய்.எஸ்.டி. பெயரில் வரி அதாவது லஞ்சம் வசூலிப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பகிரங்க குற்றம்சாட்டினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து யதீந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் மக்களுக்கு அளித்த 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதை குமாரசாமியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். குமாரசாமி இதற்கு முன்பும் ஏராளமான பொய் குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை நடந்தபோது, அவரது உடலை பார்க்க விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எனது தந்தை சித்தராமையா சென்றார். அதற்கு குமாரசாமி, உடல் பரிசோதனை அறிக்கையை திருத்த அங்கு சித்தராமையா சென்றதாக பொய் குற்றச்சாட்டை கூறினார். அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் நான் தலையிடவில்லை. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் குமாரசாமி வெளியிட வேண்டும்.
வருணா தொகுதி மக்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நான் சிபாரிசு கடிதம் கொடுக்கிறேன். இது தவறா?. நாடாளுமன்ற தேர்தலில் மைசூரு-குடகு தொகுதியில் எனக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்குவது குறித்து தெரியாது. ஆனால் அங்கு வெற்றி பெறும் வேட்பாளருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும். என்னை எம்.எல்.சி. ஆக்கி மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் கேட்கலாம். அதுபற்றி கட்சியில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
வருணா தொகுதியின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நான் மக்கள் பிரதிநிதி இல்லை என்பதால், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த முடியாது.
இவ்வாறு யதீந்திரா கூறினார்.