வீட்டை முற்றுகையிட முயன்ற விவகாரத்தில் போராட்டக்காரா்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
|தனது வீட்டை முற்றுகையிட முயன்ற விவகாரத்தில் போராட்டக்காரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சிவமொக்காவில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
போலீசாருக்கு உத்தரவு
பெங்களூருவில் உள்ள தனது வீட்டை ஏ.பி.வி.பி. அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் நான் இருக்கவில்லை. சிவமொக்காவில் நான் இருந்து வருகிறேன். எஸ்.டி.பி.ஐ. அமைப்புக்கு தடை விதிக்க கோரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அனைவரும் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்களாக என்பது குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஏனெனில் சிலர் ஏ.பி.வி.பி.யை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். அதுபற்றி கவனம் செலுத்தும்படியும் போலீசாருக்கு தெரிவித்துள்ளேன். போராட்டக்காரர்களின் உணர்வுகளை இந்த அரசும், நானும் புரிந்துகொள்ள முடிகிறது. ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து நானே பேச உள்ளேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசாா் தடியடி எதுவும் நடத்தவில்லை.
அரசுக்கு அழுத்தம்
தட்சிண கன்னடாவில் நடந்த பிரவீன் கொலை தொடர்பாக ஏ.பி.வி.பி. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்னை சந்தித்து மனு கொடுக்கவும் அவர்கள் வந்திருக்கலாம். தட்சிண கன்னடாவில் நடந்த கொலை சம்பவங்களால் நிலவிய பதற்றம் குறைந்திருக்கிறது. கொலையாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
மாநிலத்தில் உ.பி. மாடல் ஆட்சி மற்றும் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நமது மாநிலத்தில் நிலவும் நிலை வேறு, உத்தரபிரதேசத்தில் நிலவும் நிலை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்திற்கு என்று தனியான நடைமுறைகள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.