பிரதமர் மோடி அதைச் செய்யவில்லை... சில பாஜக தலைவர்கள் தான்- மம்தா பானர்ஜி பேச்சு
|மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் தவறாகப் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்புகளின் 'அதிகப்படியான செயல்களுக்கு' எதிராக தீர்மானத்தை மேற்கு வங்காள அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பேசுகையில், " பல தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தொழிலதிபர்கள் பயத்தில் ஓடுகிறார்கள்.
ஆனால் பிரதமர் மோடி இதைச் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்காது என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. சிபிஐ தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள்.
தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் பாரபட்சமான செயல்பாடுகளுக்கு எதிரானது" என்றார்.