பா.ஜனதா கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் - பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதி
|இனிமேல் அணி மாறமாட்டேன் என்றும் பா.ஜனதா கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் என்றும் பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதியளித்தார்.
அவுரங்காபாத்,
பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அடிக்கடி கூட்டணிகளை மாற்றி வருகிறார். இதில் சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட ரூ. 21,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட தொடக்க விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'பீகாருக்கு உங்களை (பிரதமர் மோடி) வரவேற்கிறேன். பீகாரில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மேலும் அதிகாரம் பெற்றிருப்பதாக மாநில மக்கள் தற்போது உணர்கின்றனர்' என பிரதமரை பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், 'வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். இனிமேல் அணி மாறமாட்டேன் என்றும், பா.ஜனதா கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் என்றும் பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்' என தெரிவித்தார்.