ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: இஸ்ரோ தலைவர்
|மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான இறுதி கட்ட பணியான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு விண்ணில் பாய இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ககன்யான் சோதனை திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது. இதற்கான கவுண்ட்டவுனும் கடைசி 5 நொடிகளில் நிறுத்தப்பட்டு, ககன்யான் விண்வெளி திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக ககன்யான் திட்ட மாதிரி சோதனை தன்னிச்சையாகவே ஹோல்டானது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் விண்கலம் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறினார். அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்பட்டு அதன்பின்னர் விரைவில் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.
இந்நிலையில் டிவி-டி1 ராக்கெட்டில் எரிபொருள் பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், தற்போது என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் காலை 10 மணிக்கு திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. வங்கக்கடலில் இறங்கிய விண்கலத்தின் மனிதர்கள் இறங்கும் கலனை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். இன்று மாலை அதனை இஸ்ரோ அதிகாரிகள் பெற்றுக்கொள்வார்கள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நிறைவடைந்த நிலையில் திட்டக்குழு விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், சோதனையை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறோம். ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்ணில் ஏவுவதற்கான இணக்கமற்ற சூழல் நிலவுவதை தரையில் உள்ள கணினி கண்டறிந்தது. இதனால் விண்ணில் ஏவும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டது" என்றார்.