அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு கோபமில்லை-ஆதித்ய தாக்கரே பேச்சு
|அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தம் உள்ளது என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.
மும்பை,
சட்டவிரோதமான ஷிண்டே அரசு நீண்ட காலம் நீடிக்காது என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். அவர் நேற்று இரவு மும்பை மாகிம் பகுதியில் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தம் உள்ளது. துரோகிகள் என அழைக்கப்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் உண்மையில் பால்தாக்கரேவின் உண்மையான சிவசேனா தொண்டர்களாக இருந்து இருந்தால் அசாமில் ஓட்டலில் தங்கி மலையை பார்த்து ரசிக்காமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றி இருப்பார்கள்.
உத்தவ்தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த போது இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரில் இருப்பது போல நினைத்து கோவா ஓட்டலில் நடனமாடினார்கள்.இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எப்போதுமே துரோகிகளாக தான் இருப்பார்கள்.இது சட்டவிரோதமான அரசு. நீண்டகாலம் நீடிக்காது. மகாவிகாஸ் ஆட்சியில் நடந்த மாநில வளர்ச்சிக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தடைபோட்டனர். கொரோனாவை திறமையாக கையாண்டு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டிய உத்தவ் தாக்கரே என்ற நல்ல மனிதரின் முதுகில் குத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.