< Back
தேசிய செய்திகள்
நான் விஸ்கியின் பரம ரசிகன்... சுப்ரீம் கோர்ட்டு அறையில் நீதிபதி, வழக்கறிஞர் கலகல உரையாடல்
தேசிய செய்திகள்

நான் விஸ்கியின் பரம ரசிகன்... சுப்ரீம் கோர்ட்டு அறையில் நீதிபதி, வழக்கறிஞர் கலகல உரையாடல்

தினத்தந்தி
|
4 April 2024 11:39 AM IST

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவிவேதி மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இருவரும் கோர்ட்டு அறையில் ஒன்றாக உரையாடினர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானம் ஆனது, மத்திய அல்லது மாநில அரசுகளில் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது பற்றிய வழக்கு விசாரணை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன் நடைபெற்று வருகிறது.

இதில், ஆலை மதுபானமும், சந்தைகளில் விற்பனையில் உள்ள உண்பதற்கு பயன்படும் மதுபானமும் ஒன்றா? என்றும் வாதம் நடைபெற்றது. இந்த வழக்கில், உத்தர பிரதேச மாநில பகுதியை சேர்ந்தவரான சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவிவேதி வாதிடும்போது, அனைத்து வடிவிலான மதுபானங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே வரும் என்று கூறினார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவிவேதி மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இருவரும் கோர்ட்டு அறையில் ஒன்றாக நேற்று உரையாடினர்.

அப்போது, வழக்கறிஞர் திவிவேதியின் தலைமுடியில் பல வண்ணங்கள் காணப்பட்டன. சமீபத்திய ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை சுட்டி காட்டி, இதுபற்றி நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், என்னுடைய வண்ணமய தலைமுடிக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

அது ஏனென்றால், ஹோலி கொண்டாட்டம்தான். நம்மை சுற்றி நிறைய குழந்தைகளும், பேர குழந்தைகளும் இருப்பதில் உள்ள சிக்கலான விசயம் இதுவாகும். அவர்களிடம் இருந்து, உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியாது என கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கிண்டலாக, சரக்கு (மதுபானம்) எதுவும் இல்லையா? என உரையாடலில் சுவாரசியம் கூட்டினார். இதனை தொடர்ந்து இருவரிடம் இருந்தும் சிரிப்பு வெளிப்பட்டது.

திவிவேதி சிரித்துக்கொண்டே, ஏன் இல்லை. அதுவும் இருந்தது. ஹோலி என்றாலே லேசாக மதுபானமும் உண்டுதான்... இதனை நான் சொல்லியே ஆக வேண்டும். நான் விஸ்கியின் பரம ரசிகன் என்றார். இதனால், மீண்டும் கோர்ட்டு அறையில் சிரிப்பொலி பரவியது.

மேலும் செய்திகள்