முதல்-மந்திரி ஆக வேண்டும் என எனக்கும் ஆசை; மந்திரி உமேஷ்கட்டி பேட்டி
|முதல்-மந்திரி ஆக வேண்டும் என எனக்கும் ஆசை என்று மந்திரி உமேஷ்கட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி மண்டியா மாவட்டம் மலவள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது. சட்டசபை தேர்தலை அவரது தலைமையிலேயே பா.ஜனதா எதிர்கொள்ள உள்ளது. நானும் 8 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பல்வேறு துறைகளின் மந்திரியாகவும் பணியாற்றியுள்ளேன். அதனால் நானும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்.
பா.ஜனதாவில் எடியூரப்பாவை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை. அவர் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர். மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
இவ்வாறு உமேஷ்கட்டி கூறினார்.