ஹைட்ரஜன் ரெயில் நடப்பு ஆண்டு டிசம்பருக்குள் வெளிவரும்: மத்திய ரெயில்வே மந்திரி தகவல்
|உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் ரெயில் நடப்பு ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலான நிலையில், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார்.
அவர் கூறும்போது, ரெயில்வேக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு பெரிய மாற்றம். அது பயணிகளின் நோக்கங்களை நிறைவேற்றும்.
அமுத பாரத திட்டத்தின் கீழ், 1,275 நிலையங்கள் மீண்டும் கட்டமைக்கப்படும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
வந்தே பாரத் ரெயில்கள், சென்னை ஐ.சி.எப். மட்டுமின்றி இனி அரியானாவின் சோனிபத் மற்றும் மராட்டியத்தின் லத்தூர் நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படும். இதனால், வந்தே பாரத் ரெயில்களை கொண்டு ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் பிரதமர் மோடியின் கனவு பூர்த்தியாவதற்கு வகை செய்யும்.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரான ஹைட்ரஜன் ரெயில், நடப்பு ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும். முதலில், கல்கா-ஷிம்லா போன்ற பாரம்பரிய பகுதிகளில் இயக்கப்படும். பின்னர் இந்த ரெயில் சேவை பிற இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்து உள்ளார்.