திருமணத்திற்காக பற்களை அழகு படுத்த மருத்துவமனைக்கு சென்ற மணமகன் உயிரிழப்பு
|அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்,
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த சிறப்பு நாளில் மணமக்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புவார்கள். அந்தவகையில் திருமணத்திற்காக பற்களை அழகு படுத்த சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமி நாராயணா (வயது 28) என்ற இளைஞருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தனது பற்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 16-ம் தேதி அங்கு அவருக்கு பல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் திடீரென அவர் உயிரிழந்து விட்டார்.
அதிக அளவு மயக்க மருந்து கொடுத்ததாலேயே தனது மகன் இறந்ததாக அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். அறுவை சிகிச்சையின்போது தனது மகன் மயக்கமடைந்ததை அடுத்து, ஊழியர்கள் தன்னை அழைத்ததாகவும் உடனடியாக தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நாராயணாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறினார்.
அறுவை சிகிச்சை குறித்து தனது மகன் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனுக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவரது மரணத்திற்கு மருத்துவர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து உயிரிழந்த லட்சுமி நாராயணாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அலட்சியமாக இருந்ததாக தனியார் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் பற்களை அழகு படுத்த (ஸ்மைல் டிசைன்) அறுவை சிகிச்சை செய்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.