'இந்தியன் 2' பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை வீடியோ ஆதாரத்துடன் போலீசில் சிக்க வைத்த கணவர்
|'இந்தியன் 2' பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை, கணவர் வீடியோ ஆதாரத்துடன் போலீசில் சிக்க வைத்துள்ளார்.
ஐதராபாத்,
'இந்தியன் 2' பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை வீடியோ ஆதாரத்துடன் இணையத்தில் அம்பலப்படுத்தி கணவர் போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியில் துணை எக்ஸிகியூடிவ் என்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் திவ்ய ஜோதி. அவர் லஞ்சம் வாங்கி வீடு, பங்களா என சொத்துகளை குவித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார்.
ஆனால், இதனை திவ்ய ஜோதி காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்தியன் தாத்தாவாக வெகுண்டெழுந்த கணவர், வீட்டின் பூஜையறையிலும், படுக்கை அறையிலும் மனைவி பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணம் 30 லட்ச ரூபாயை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது.
இதையடுத்து ஐதராபாத் மாநகராட்சியில் இருந்து திவ்யா ஜோதியை பணிமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.