ஐதராபாத்தில் டி.வி. தொகுப்பாளரை கடத்திச் சென்று காதல் தொல்லை கொடுத்த பெண் தொழிலதிபர்
|டி.வி. தொகுப்பாளரை பெண் தொழிலதிபர் கடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமண பதிவு இணையதளத்தில் டி.வி. தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்பவரது புகைப்படத்தை பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த நபருடன் தொர்பு கொண்டு பேசியும் வந்துள்ளார்.
ஆனால் அது உண்மையில் டி.வி. தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா இல்லை என்பது சில நாட்களில் போகிரெட்டி திரிஷ்னாவுக்கு தெரியவந்துள்ளது. சைத்தன்யா ரெட்டி என்ற நபர் அவ்வாறு போலி புகைப்படத்தை வைத்து போகிரெட்டி திரிஷ்னாவை ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து டி.வி. தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை போகிரெட்டி திரிஷ்னா கூறியுள்ளார். அவரும் உடனடியாக இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போகிரெட்டி திரிஷ்னா அதோடு நிற்காமல், பிரணவ் சிஸ்ட்லாவிற்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து திரிஷ்னாவின் நம்பரை பிரணவ் பிளாக் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த திரிஷ்னா, தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருடன் சேர்ந்து டி.வி. தொகுப்பாளரை கடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்த நபருக்கு ரூ.50,000 பணம் கொடுத்துள்ளார். அந்த நபர் மேலும் 4 பேரை சேர்த்துக் கொண்டு கடந்த 11-ந்தேதி பிரணவ் சிஸ்ட்லாவை கடத்தியுள்ளார்.
அவர்கள் பிரணவ் சிஸ்ட்லாவை பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னாவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். தொடர்ந்து திரிஷ்னாவுடன் தொடர்பில் இருப்பதாக பிரணவ் உறுதியளித்த பின்னர் அவரை அவர்கள் விடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக பிரணவ் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தல்காரர்கள் 5 பேரை கைது செய்தனர். டி.வி. தொகுப்பாளரை பெண் தொழிலதிபர் கடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.