ஆந்திரா:செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் ரூ.37.50 லட்சம் பணம் பறிமுதல்
|செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி ரூ.37.50 லட்சம் பணம் வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரிடம் இருந்து ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செகந்திரபாத்,
மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அப்போது செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக ரூ. 37.50 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் காஞ்சிபுரம் அருகே மதுராந்தகத்தை சேர்ந்த லக்ஷமன் ராம் (வயது 45) என்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில், அந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 37.50 லட்சம் பணம் ஐதராபாத் ஆயகர் பவனில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.