தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை அல்ல- மும்பை கோர்ட்டு தீர்ப்பு
|வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மும்பை:
மராட்டிய அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் பெண்களை பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவரின் மனுவை நிராகரித்தது.
இதையடுத்து அவர் மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதில் அவர், "எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்தார். அப்போது அவர் தாயின் சிகிச்சைக்காக தொடர்ந்து பணம் அனுப்பினார். மேலும் அவருடன் அதிக நேரத்தை செலவழித்தார். இது எனது திருமண வாழ்க்கையில் மோதலுக்கு வழிவகுத்தது" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிஷ் அயாச்சி தீர்ப்பில் கூறியதாவது:-
1993-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதி 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில் தான் அவர்களின் திருமணம் முறிந்துள்ளது. திருமண வாழ்க்கையில் கணவர் எதிர்கொண்ட போராட்டங்கள், தற்கொலை முயற்சிகள் போன்ற ஆதாரங்கள் அதில் கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்ணின் கணவர் 2 அல்லது 3 முறை தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றதாக கூறப்பட்டு உள்ளது.
பெண்ணின் கணவர் அவரது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறார் என்று குறை கூறுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது. பெண்ணின் கூற்றுகள் தெளிவற்றவை மற்றும் உண்மையில் நம்பகத்தன்மை இல்லாதவை. அவர், தான் குடும்ப வன்முறைக்கு ஆளானார் என்பதை நிரூபிக்க தவறிவிட்டார். பெண்ணின் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என கோர்ட்டு முடிவு செய்கிறது. எனவே அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தீர்ப்பு கூறினார்.