வெள்ளத்தில் மூழ்கிய பாலம் நடுவே கர்ப்பிணி மனைவியை காரில் அழைத்து சென்ற கணவர் - பதறவைக்கும் வீடியோ
|வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 3வது நாளாக நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293-ஆக உயர்ந்துள்ளது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே, தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கணவர் துணிச்சலாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.