மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்
|குழந்தைகளின் கண் எதிரே மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் வெண்மணியை சேர்ந்தவர் ஷாஜி (வயது52). இவருக்கு தீப்தி(50) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் ஷாஜியின் வீட்டில் இருந்து 2 குழந்தைகளும் நீண்டநேரமாக கதறி அழும் சத்தம் கேட்டது. குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அவர்கள் வருவதை கண்ட ஷாஜி படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாக அவர் கதவை திறக்கவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றதை உணர்ந்த பொதுமக்கள் இதுபற்றி வெண்மணி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, சமையல் அறையில் தீப்தி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், படுக்கை அறையில் ஷாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதையும் போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் சமாதானமாகி உள்ளனர். இதையடுத்து தீப்தி காலை டிபன் செய்வதற்காக சமையலறை சென்றுள்ளார்.
ஆனால், தகராறில் ஏற்பட்ட ஆத்திரம் தீராத ஷாஜி அரிவாளுடன் சமையல் அறைக்கு சென்று திடீரென தீப்தியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது, வீட்டில் இருந்த 2 குழந்தைகளும் தங்கள் கண் எதிரே தாயை, தந்தை வெட்டிக்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியில் செய்வதறியாது கதறி அழுதனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதை கண்ட ஷாஜி உடனே படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து வெண்மணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப தகராறில் குழந்தைகளின் கண் எதிரே மனைவியை வெட்டி படுகொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.