பெங்களூருவில் பெண்ணை குத்தி கொல்ல முயற்சி; கணவர் கைது
|பெண்ணை குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகோடி:-
பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நீலசந்திரா அருகே பஜார் தெருவில் வசித்து வருபவர் தயானந்த். இவரது மனைவி பிரியங்கா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தயானந்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி பிரியங்காவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தயானந்த் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவியுடன் அவர் தகராறு செய்ததாக தெரிகிறது. பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து பிரியங்காவை தயானந்த் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய பிரியங்கா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆடுகோடி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரியங்கா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்துள்ளார். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை தயானந்த் கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தயானந்தை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.