மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் கைது
|கர்நாடகாவில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே அவுட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தப்பா பசவராஜ், கெஞ்சம்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. பசவராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கெஞ்சம்மா அருகில் இருக்கும் வீடுகளில், வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று கெஞ்சம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சித்தப்பா பசவராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில், கெஞ்சம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பசவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.