தொடரும் வேட்டை: மராட்டியத்தில் ரூ.3,500 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
|போதை பொருட்களில் சில லண்டன் நகரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என புனே போலீசார் கூறினர்.
புனே,
மராட்டியத்தில் சில நாட்களாக போதை பொருட்கள் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். புனே மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.3,500 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை போலீசார் இன்று தெரிவித்தனர்.
இதுபற்றி போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புனே நகர போலீசார் கூறும்போது, மொத்தம் 1,800 கிலோ எடை கொண்ட எம்.டி. வகை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என புனே நகர கமிஷனர் அமிதேஷ் குமார் கூறியுள்ளார்.
இதற்கு பின்னணியில் கூரியர் நிறுவனம் ஒன்று உள்ளது. அதன் வழியே, தயாராக உள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொட்டலங்களில் வைத்து அவை விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த போதை பொருட்களில் சில லண்டன் நகரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
இதேபோன்று புனே நகரில் உள்ள எம்.ஐ.டி.சி. பகுதியில், தொழிற்சாலை ஒன்றில் புனே போலீசார் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ரூ.1,100 கோடி மதிப்பிலான எம்.டி. வகை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விஷ்ரந்த்வாடி பகுதியில் இருந்த 2 குடோன்களிலும் கூட அவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், போதை பொருட்களை தேடும் பணியும், விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகின்றன.