< Back
தேசிய செய்திகள்
ஓடியும், மிதித்தும், குதித்தும் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள்; நேற்றே கடுமையாக ஆடிய குஜராத் பாலம்
தேசிய செய்திகள்

ஓடியும், மிதித்தும், குதித்தும் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள்; நேற்றே கடுமையாக ஆடிய குஜராத் பாலம்

தினத்தந்தி
|
30 Oct 2022 11:04 PM IST

குஜராத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஓடியும், குதித்தும் சென்றதில் நேற்றே கேபிள் பாலம் கடுமையாக ஆடியது.

ஆமதாபாத்,


குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதன்பின்னர், கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில், பாலத்தில் இன்று 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். பலரது நிலைமை என்னவென்று தெரியவில்லை.




இதுபற்றி தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். உள்ளூர்வாசிகளும் உதவிக்கு ஓடி வந்துள்ளனர். 100 பேர் வரை பால இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவலை குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். எனினும், குஜராத் பஞ்சாயத்து மந்திரி பிரிஜேஷ் மெர்ஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது என கூறினார்.

பிரதமர் மோடி நிலைமை பற்றி என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து உள்ளார். குஜராத் முதல்-மந்திரியும் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். காயமடைந்த மக்களை காப்பாற்ற உள்ளூர் தலைவர்களும் பணியாற்றி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

பின்பு, பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது என மந்திரி மெர்ஜா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி சார்பில் இழப்பீடும் அறிவிக்கப்பட்டன.

நூற்றாண்டு கண்ட இந்த பாலம் அதிக எடையை சுமக்க திணறியுள்ளது. 24 மணிநேரத்திற்கு முன்பு, நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பாலத்தின் மீது சென்றனர். அவர்களில் பலர் ஓடியபடியும், குதித்தபடியும் காணப்பட்டனர். ஒரு சிலர் பாலத்தின் ஓரத்தில் ஓங்கி மிதித்தும் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இதில், எடை பொறுக்காமல் பாலம் கடுமையாக ஆடியுள்ளது. எனினும், இதுபற்றி கவனம் கொள்ளாமல் மற்றவர்கள் சென்றனர். இது தெரியாமல், விடுமுறை நாளான இன்று, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில், பாலம் அதிக சுமையால் விழுந்து நொறுங்கியுள்ளது.

தொடர்ந்து இரவு வேளை வந்த நிலையில், மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சிலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். பலரின் கதி என்னவென தெரியவில்லை. நீச்சல் வீரர்கள், மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்