< Back
தேசிய செய்திகள்
மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் - உய்குர் விவகாரத்தில் முதல்முறையாக சீனா மீது இந்தியா நேரடி விமர்சனம்
தேசிய செய்திகள்

'மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்' - உய்குர் விவகாரத்தில் முதல்முறையாக சீனா மீது இந்தியா நேரடி விமர்சனம்

தினத்தந்தி
|
7 Oct 2022 8:44 PM IST

உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரத்தில் சீனா மீது முதல் முறையாக இந்தியா நேரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் தன்னாட்சி மாகாணமாக ஜின்ஜியாங் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். உய்கர் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜின்ஜியாங் மாகாணத்தில் பல லட்சம் இஸ்லாமிய மதத்தினர் சீன அரசால் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரிய வந்தது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (ஓ.ஹச்.சி.ஹச்.ஆர்), சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

இதனையடுத்து, ஜின்ஜியாங் விவகாரம் பற்றிய ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள மக்களின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்க கனடா, டென்மார்க், பின்லாது, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக வரைவு தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவந்தனர். இந்த வரைவு தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்நிலையில், உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரத்தில் சீனா மீது முதல் முறையாக இந்தியா நேரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சீனாவின் ஜின்ஜியாங் மாகாண உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்தியா பங்கேற்காதது? ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தன்னாட்சி மாகாணமாக ஜின்ஜியாங் மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு உறுதிபடுத்தப்படவேண்டும். அனைத்து மனிதர்களின் மனித உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தீர்மானங்களால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்ற நினைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது. அதுபோன்ற பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆதரவாக உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்