ஒடிசா ரெயில் விபத்தில் மனித தவறுகள்... ரெயில்வே தகவல்
|ஒடிசாவில் 293 பேர் உயிரிழந்த ரெயில் விபத்து சம்பவத்தில் மனித தவறுகள் ஏற்பட்டு உள்ளது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ந்தேதி பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே ஷாலிமார், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் மோதி கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
இந்த சம்பவத்திற்கு பல உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து கொண்டன. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த விபத்தில் சதி திட்டம் நடந்து இருப்பது பற்றி விசாரிக்க போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறும்போது, சிக்னல் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் செய்த தவறால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறியுள்ளார்.
இதில், தொழில் நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறுக்கான சாத்தியங்களை அவர் நிராகரித்து உள்ளார். அடிமட்ட அளவில் உள்ள சில அதிகாரிகள், ஆய்வுக்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு, பாதுகாப்பு விசயங்களில் மாற்றம் செய்த பின்னர் அலட்சியத்துடன் செயல்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், சிக்னல் துறை மட்டுமின்றி, பிறரும் இந்த சம்பவத்தில் அலட்சியத்துடன் உள்ளது தெரிய வந்து உள்ளது என்றும் அவர்களுக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது ஒரு நபர் என்றில்லாமல் குறைந்தது 5 பேரின் தவறு தெரிய வந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.