எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விவரங்களை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய கோர்ட்டுகளை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கவும், தண்டனை குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை விதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் விஜய் ஹன்சார்யா, இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 400 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் கண்காணித்து வருகிறது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுப் பெறலாம். நீதித்துறை அதிகாரிகளின் பணியிடமாற்றத்தை அந்தந்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் கண்காணிக்கலாம். ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் அனுமதியுடன்தான் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கிவிடலாம் என வாதிட்டார்.
அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய ஐகோர்ட்டுகளுக்கு உத்தரவிட்டது. நீதித்துறை அதிகாரிகளின் பணியிடமாற்றத்துக்கு அந்தந்த ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் மாற்றியமைத்தது.