ஒடிசா ரெயில் விபத்து நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
|ஒடிசா ரெயில் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
தவறான சிக்னலால் தவறாக நுழைந்த ரெயில்...
சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் விபத்தில் சிக்கியதின் பின்னணி குறித்து ரெயில்வே விசாரணை நடத்துகிறது.
இந்த விசாரணையின் முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவை வருமாறு:-
* கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், மெயின் லைனில் நுழைவதற்குப் பதிலாக லூப் லைனில் தவறாக நுழைந்துள்ளது. தவறான சிக்னல் காட்டப்பட்டதால் இது நேர்ந்துள்ளது.
* லூப் லைன் என்பது கூடுதல் எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் நோக்கத்தில் ரெயில் நிலைய பகுதிகளில் அமைக்கப்படுகிற கூடுதல் பாதை ஆகும். இதில் மெயின் லைனில் இருந்து தண்டவாளப் பாதை விலகி தனி வழியில் சிறிது தொலைவுக்கு சென்று, பின்னர் மீண்டும் மெயின் லைனில் சேர்ந்து விடும். இந்த லூப் லைன் பொதுவாக 750 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
மற்றொரு ரெயில் மீது மோதல்
* விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சற்று தொலைவில் உள்ள பஹாநகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள மெயின் லைனில் நுழைவதற்கு பதிலாகத்தான் லூப் லைனில் சென்று அங்கு நின்றிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இதில் 10-12 கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றின் மீது மற்றொரு தடத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மோதியது.
* கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் 128 கி.மீ. வேகத்தில் வந்துள்ளது. பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரெயில் 116 கி.மீ. வேகத்தில் வந்துள்ளது. இரு ரெயில்களிலும் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு தெரிய வந்துள்ளது.
நிமிடவாரியாக நடந்தது என்ன?
* நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், லூப்லைனில் சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியபோது பலத்த சத்தம் கேட்டுள்ளது.
* 6.55 மணிக்கு, தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மோதியது.
* 7.10 மணிக்கு விபத்து பற்றிய தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அங்கு மீட்புப்பணிக்காக குவிந்தனர்.
* 7.30 மணிக்கு உள்ளூர் அதிகாரிகள், போலீஸ், நெருக்கடி கால பணியாளர்கள் விரைந்தனர்.
* 8.30 மணிக்கு, விபத்தில் சிக்கியோருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள், சார்பு மருத்துவ பணியாளர்கள் குவிந்தனர். ஆம்புலன்சுகள் வந்தன.
* 9.30 மணிக்கு பயணிகளை மீட்டு அழைத்துச் செல்ல பஸ்கள் வந்தன.
* 9.59 மணிக்கு மும்பை-கோவா வந்தேபாரத் ரெயில் ரத்து அறிவிப்பு