"காசி தமிழ் சங்கமம் விழா நடத்தும் எண்ணம் பிரதமர் மனதில் எப்படி தோன்றியது?" - இளையராஜா கேள்வி
|காசி தமிழ் சங்கமம் விழாவை நடத்தும் எண்ணம் பிரதமர் மனதில் எப்படி தோன்றியது? என இளையராஜா வியந்து கேள்வி கேட்டார்.
வாரணாசி,
வாரணாசியில் நேற்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காசி நகருக்கும், தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கு அனைவரும் விளக்கி பேசினார்கள். பாரதியார் இங்கு 2 ஆண்டுகள் படித்திருக்கிறார். அவர் படித்து கற்றுக்கொண்டதுடன், புலவர் பெருமக்களுடன் உரையாற்றி இருக்கிறார். இது பற்றி இங்கு பேசிய பேச்சுக்களை காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம் என்று இந்தியாவில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நேரத்தில் அந்த பாடலை பாடியிருக்கிறார்.
"கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என்ற பாடல் மூலம் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அப்போதே அவரது 22 வயதில் பாடிவிட்டு சென்றிருக்கிறார். அவர் தன் 9 வயது முதல் 11 வயது வரை 2 ஆண்டுகள் இங்கு படித்து அறிவு பெற்று இருக்கிறார் என்பது தமிழ் பெருமக்களுக்கு அரிய விஷயம் ஆகும்.
அதைப்போல நீங்கள் இதுவரை அறியாத ஒரு புதிய விஷயத்தை இங்கு சொல்கிறேன். கபீர்தாசர் போகாவழி பாடலை எழுதினார். இது 2 அடிகளைக் கொண்டது அதைப்போல தமிழில் திருவள்ளுவர் திருக்குறளை 2 அடிகளில் எழுதினார். போகாவழி 8 சீர்களைக் கொண்டது. திருக்குறள் 7 சீர்களைக் கொண்டது. முதல் வரியில் 4 சீர்களும், 2-வது வரியில் 3 சீர்களும் இருக்கும். இந்த நிகழ்வுகளையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
எப்படி தோன்றியது?
இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன். முத்துசாமி தீட்சிதர் இங்கு வந்துதான் பாடி சென்றுள்ளார். அவர் கங்கை நதியில் மூழ்கி எழுந்த போது, சரஸ்வதிதேவி அவரிடத்திலே வீணையை கொடுத்து இருக்கிறார்.
அந்த வீணை இன்னும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறேன்.
அப்படிப்பட்ட பெருமைகள்மிகு காசி நகரத்திலே தமிழ் சங்கமம் விழா நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமரிடத்தில் எப்படி தோன்றியது என்பதை நான் வியந்து வியந்து எண்ணி கொண்டிருக்கிறேன். (அப்போது மோடியைப் பார்த்து) "மோடி ஜி! என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனெனில், இந்த சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது என்பதை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நிலைத்த புகழும் தர வேண்டும். மென்மேலும் அது ஓங்க வேண்டும்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.