வீடு புகுந்து ரூ.3½ லட்சம் தங்கநகைகள் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
|சிவமொக்கா டவுனில்,வீடு புகுந்து ரூ.3½ லட்சம் தங்கநகைகள் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் பாபுஜி நகரில் வசித்து வருபவர் தஸ்தகீர் கான். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளார். இதையறிந்த மா்மநபர்கள், அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் பீரோவில் இருந்த தங்கநகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதைதொடர்ந்து இரவு வீடு திரும்பிய தஸ்தகீர் கான், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த 85 கிராம் தங்கநகைகள் திருட்டு போய் இருப்பதை பார்த்தார். இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தஸ்தகீர், கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது நாய் மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடிநின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதற்கிடையே தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.