வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் - நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து
|எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.
உதய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 9-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடந்தது. அதை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓம்பிர்லா பேசியதாவது:-
நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். தங்களின் செயல்பாடுகளால், சபையின் கண்ணியத்தை உயர்த்த வேண்டும்.
மக்களை மையப்படுத்தி, அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துவதுதான் சபை செயல்பாடுகளின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்.
அமளி குறையும்
ஆனால், விவாதத்தின் தரம் தாழ்ந்து வருவது கவலை அளிக்கிறது. அமளி, கோஷமிடுதல், நாடாளுமன்றத்துக்கு முரணான நடத்தை ஆகியவை குறைய வேண்டுமானால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் நடத்தையை அவர்களை தேர்வு செய்த வாக்காளர்கள் கேள்வி கேட்க தொடங்க வேண்டும்.
சபாநாயகர்கள், அந்த இருக்கையில் இருக்கும்போது, கட்சி எல்லையை கடந்து, பாரபட்சமற்ற முறையில் சபையை நடத்த வேண்டும். மாநில சட்டசபைகள், 'ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் தளம்' என்பதை அமல்படுத்த முன்வர வேண்டும்.
அசோக் கெலாட்
நாடாளுமன்றம், சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு விதிமுறைகள் வகுக்கும்போது, மக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும். சபை நடவடிக்கைகளை மின்னணுமயமாக்கினால், அதன் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று அவர் பேசினார்.
மாநாட்டில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் பங்கேற்றார்.