இளம்பெண்களை பயன்படுத்தி'ஹனி டிராப்' மோசடி அதிகரிப்பு
|பெங்களூருவில் இளம்பெண்களை பயன்படுத்தி ‘ஹனி டிராப்’ மோசடி அதிகரித்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் தொழில் அதிபர்களை குறிவைத்து இளம்பெண்கள் மூலம் வீடியோ கால் செய்து, ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் என்ற தொழில் அதிபருக்கு, செல்போன் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் நெருங்கி பழகிய நிலையில், சம்பவத்தன்று தொழில் அதிபருக்கு வீடியோ கால் செய்தார். அப்போது இளம்பெண் நிர்வாணமாக நின்றுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் செல்போன் இணைப்பை துண்டித்தார். இதையடுத்து அந்த வீடியோவை காண்பித்து அவரை மிரட்டி மர்மகும்பல் ரூ.50 ஆயிரம் கேட்டு தொல்லை கொடுத்தனர்.
உடனே அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்தி தொழில் அதிபர், அரசு அதிகாரிகளை குறிவைத்து இளம்பெண்களை ஏவி மர்மநபர்கள் பணம் பறித்து வருகின்றனர். அவர்கள் நேரடியாக சென்று கொள்ளையில் ஈடுபடாமல், ஆபாசமான வீடியோக்களை குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதாக கூறி மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளிக்க பலரும் முன்வர தயங்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள், 1930 அல்லது 112 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்' என்று கூறினர்.