கனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் லண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா
|பயங்கரவாத அமைப்பான சர்வதேச பாபர் கல்சா அமைப்புடன் லண்டா தொடர்பு வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி கனடா குற்றம்சாட்டியதால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் வசித்து வரும் பிரபல தாதா லக்பீர் சிங் லண்டாவை (வயது 34) பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "லக்பீர் சிங் லண்டாவின் நிரந்தர முகவரி பஞ்சாப் மாநிலத்தின் டான் டரன் மாவட்டம் விபிஓ ஹரிக் கிராமம் ஆகும். அவர், பயங்கரவாத அமைப்பான சர்வதேச பாபர் கல்சா அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார். மொகாலியில் உள்ள மாநில புலனாய்வு பிரிவு கட்டிடம் மீதான தாக்குதலில் தொடர்புடையவர். மேலும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு எதிராக 9-6-2021 அன்று லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் லண்டா, இப்போது கனடாவின் எட்மான்டன் நகரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.