அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யுங்கள் - மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை
|அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ராம நவமி கடந்த 30-ந் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, மேற்கு வங்காளம், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. 2 குழுக்களாக மோதிக்கொண்டனர். கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.
மேற்கு வங்காள கலவரம் குறித்து அம்மாநில கவர்னர் ஆனந்த போசிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார். கலவர பகுதிகளை கவர்னர் ஆனந்த போஸ் நேரில் பார்வையிட்டார். பீகாரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அங்கு செல்ல இருந்த பயணத்தை அமித்ஷா ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. இந்த பின்னணியில், இன்று (வியாழக்கிழமை) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ராமநவமி கொண்டாட்டம் போல், இதில் வன்முறை நடக்காதவாறு கண்காணிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், ''அனுமன் ஜெயந்தி அமைதியாக கொண்டாடப்பட வேண்டும். அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீாகுலைக்கக்கூடிய நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.