ஜூனியர் என்.டி.ஆருடன் அமித்ஷா சந்திப்பு
|பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஐதராபாத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமித்ஷா-ஜூனியர் என்.டி.ஆர். சந்திப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒருநாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். அப்போது ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அவர், பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்துப் பேசினார்.
அதுகுறித்து அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மிகவும் திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் ரத்தினங்களில் ஒருவருமான ஜூனியர் என்.டி.ஆருடன் ஐதராபாத்தில் ஒரு நல்ல உரையாடலை நிகழ்த்தினேன்' என்று தெரிவித்துள்ளார்.
பாராட்டு
அதற்கு பதிலாக, 'அமித்ஷாஜியை சந்தித்து அருமையான உரையாடலை மேற்கொண்டது சந்தோஷம். அவரது கனிவான வார்த்தைகளுக்கு நன்றி' என்று ஜூனியர் என்.டி.ஆர். கூறியுள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, ராஜமவுலியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிரடி வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை அமித்ஷா பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சந்திப்பின்போது உடனிருந்த தெலுங்கானா பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான பந்தி சஞ்சய்குமார், இது ஒரு தனிப்பட்ட சந்திப்பு என்று கூறியுள்ளார்.
ஆனால் அமித்ஷா- ஜூனியர் என்.டி.ஆர். இடையிலான சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் பா.ஜ.க. வலுவாக காலூன்ற முயன்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களையும், தெலுங்கானாவில் வசிக்கும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வாக்காளர்களையும் கவரும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
ஜூனியர் என்.டி.ஆரின் தேர்தல் பிரசாரம்
தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிய ஜாம்பவான் என்.டி.ராமராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர்., கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் அதன்பிறகு அக்கட்சி விவகாரங்களிலும், அரசியலிலும் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருந்துவருகிறார். அவருக்கு அரசியல் லட்சியங்கள் எதுவும் உண்டா என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஜூனியர் என்.டி.ஆர். தவிர, ஊடக அதிபர் ரமோஜி ராவையும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் அமித்ஷா தனியாக சந்தித்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடேயில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பேசினார். அப்போது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. ராஜகோபால் ரெட்டி, பா.ஜ.க.வில் இணைந்தார்.