'ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு' முன்பு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துங்கள் - அகிலேஷ் யாதவ்
|‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி மத்திய அரசு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கூறி உள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி மத்திய அரசு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
"எந்தவொரு பெரிய வேலையும் செய்வதற்கு முன் ஒரு பரிசோதனை தேவைப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதை செயல்படுத்துவதற்கு முன், பா.ஜனதா அரசு உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள் என கூறி உள்ளார்.