வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்; அமித்ஷா வேண்டுகோள்
|நாடு முழுவதும் 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவருடைய வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்றும்படி மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த 2 ஆண்டுகளாக, வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றும் நிகழ்வு ஒரு தேசிய இயக்கம் ஆக உருவெடுத்து உள்ளது. இது ஒவ்வோர் இந்தியரிடத்திலும் அடிப்படை ஒற்றுமையை விழித்தெழ செய்துள்ளது.
இந்த இயக்கம் இன்னும் வலுப்பட வேண்டும் என்று குடிமக்கள் அனைவரிடமும் வேண்டுகோளாக வைக்கிறேன். அதே ஆர்வத்துடன் மீண்டும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
உங்களுடைய வீடுகளில் நம்முடைய பெருமையை, நம்முடைய மூவர்ண கொடியை ஏற்றுங்கள். அந்த மூவர்ண கொடியுடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை https://harghartiranga.com என்ற ஹர்கர் திரங்கா வலைதளத்தில் பதிவேற்றுங்கள் என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவருடைய வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அதனை செல்பியாக புகைப்படம் எடுத்து அதற்கான வலைதளத்தில் பதிவேற்றும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.