நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவரின் தலை துண்டிப்பு; வீடியோ வெளியானதால் பதற்றம்!
|கையில் ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோவை இன்று வெளியிட்டு, பிரதமருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர் அந்த கொலையாளிகள்.
உதய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நபிகள் நயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, சமூகவலைதளத்தில் அந்த கடைக்காரரின் எட்டு வயது மகன் போட்ட பதிவு படுகொலைக்கு வழிவகுத்துள்ளது.
நுபுர் ஷர்மாவைப் பற்றிய சமூக ஊடகப் பதிவால் கோபமடைந்த சில மர்மநபர்கள், அவருடைய கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி அவரின் தலையை துண்டித்துள்ளனர். மேலும், அவர்கள் கையில் ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோவை இன்று வெளியிட்டு, பிரதமருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர் அந்த கொலையாளிகள்.
இதனையடுத்து உதய்பூரில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வலியுறுத்தி உள்ளார்.
உதய்பூரில் உள்ள ஒரு தையல் கடைக்குள் நுழைந்த இருவர் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர். கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூர் முழுவதும் போராட்டம் வெடித்ததால் இந்து அமைப்புகள் கடைகளை மூடியுள்ளன. நிலைமை மோசமடைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் தாராசந்த் மீனா, காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.