ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபடுவதற்கு எதிரான மனு தள்ளுபடி- அலகாபாத் ஐகோர்ட்டு அதிரடி
|அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தின்போது இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அலகாபாத்:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. இந்து கோவிலை இடித்து அந்த மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று இந்துக்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையே ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் பூஜை நடத்தலாம் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மசூதி வளாகம் குறித்த இந்திய தொல்லியல் துறை அறிக்கை வெளியானதையடுத்து, இந்த உத்தரவு வெளியானது. அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தின்போது இந்து கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை தெரிவித்திருந்தது. கோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அலகாபாத் ஐகோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வாரணாசி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.