'இந்து என்பது புவியியல் சொல், மதத்தைக் குறிக்கும் பெயர் அல்ல' - கேரள கவர்னர் பேச்சு
|இந்து என்பது இந்த நாட்டில் பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"காலனி ஆதிக்க காலத்தில் இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர் போன்ற சொற்களை பயன்படுத்துவது அவசியமாக இருந்தது. ஏனெனில் குடிமக்களின் சாதாரண உரிமைகளை கூட தீர்மானிக்க ஆங்கிலேயர்கள் சமூகங்களை அடிப்படையாக வைத்திருந்தனர்.
இந்து என்பது மதத்தைக் குறிக்கும் பெயர் அல்ல, புவியியல் ரீதியாகவே அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்து என்பது இந்த நாட்டில் பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
இந்தியாவில் விளைந்த உணவை சாப்பிடுபவர்களும், இந்திய நதிகளில் இருந்து நீரைக் குடிப்பவர்களும் இந்து என்று தங்களை அழைத்துக் கொள்ள தகுதியானவர்கள் தான். எனவே நீங்கள் என்னை இந்து என்று அழைக்க வேண்டும்."
இவ்வாறு கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.