இந்து சிறுமிகள் ஒரு சதி திட்ட செயலில் சிக்க வைக்கப்படுகின்றனர்; பா.ஜ.க. பெண் எம்.பி. பேச்சு
|இந்துக்கள் யாருக்கு எதிராகவும் சதி திட்டம் தீட்டுவது இல்லை என பா.ஜ.க. பெண் எம்.பி. பிரக்யா சிங் கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.பி.யான பிரக்யா சிங் தாக்குர் அவ்வப்போது சில விசயங்களை கூறி அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவார்.
அவர் இன்று கூறும்போது, தர்மம் பின்பற்ற கூடிய மக்கள் கவனமின்மையுடன் செயல்படும்போது, அநீதி அதிகரிக்கிறது. அதுவே இன்று நடந்து வருகிறது.
அவர்கள் (வேறு சமூகத்தினரை குறிப்பிட்டு) தங்களது திட்டத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.
தீயவையாக நம்பப்படும் சமூக கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள், அவர்களது செயல்களை செய்து வருகின்றனர். ஒரு விஷத்தன்மை வாய்ந்த மனப்பான்மையை பரப்பி வருகின்றனர். அதுபோன்ற நபர்களை கடிந்துரைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, இந்து சிறுமிகள் ஒரு சதி திட்ட இயக்கத்தின் கீழ் சிக்க வைக்கப்படுகின்றனர். டெல்லியில் ஒரு சிறுமி கொல்லப்பட்டு உள்ளார். சிறுமிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை பாதுகாப்பாக இல்லை. இந்துக்கள் யாருக்கு எதிராகவும் எந்த சதி திட்டமும் செய்வது இல்லை என அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் சில நாட்களுக்கு முன் 16 வயது சிறுமி, மெக்கானிக் வேலை செய்த சாஹில் என்ற 20 வயது நபரால் கொடூர கொலை செய்யப்பட்டார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகளும் வெளிவந்தது.
அதில், சிறுமி சரிந்து விழுந்த பின்னரும் ஆத்திரம் தீராமல் சாஹில் கடுமையாக தாக்குகிறார். இவை எல்லாம் நடந்தபோதும், மக்கள் அந்த வழியே அதனை பார்த்தபடி, தடுக்க முற்படாமல் தங்களது வேலைகளை கவனிக்க செல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.